Sunday, January 17, 2010

வழித்தடத்தை திரும்பிப்பார்த்தால் வலிக்கும்...

இமை கழுவாமல் பார்க்கின்ற
அதிகாலை நதிப்பரப்பும்,
நீள் கூந்தல் அலைகின்ற
எந்தப்பெண் முதுகும்,
புழுதி கிளம்ப அடிக்கின்ற
கோடை மழைத்துளியும்,
நடுநிசியில் குழந்தைபோல்
சிமிட்டல் காட்டும் விண்மீனும்,
மிருதுவான மென்குரலில்
'சுவர்ணலதா' பாடுவதும்
உன்னை எனக்கு
நினைக்க செய்பவை.

உற்றுப் பார்த்துச் சிரிக்காமல்
ஒதுங்கிப் போகும் பைத்தியமும்
தலை குனிந்து நிற்கின்ற
காளியம்மன் கோவில் பூதமும்,
எந்நேரமும் காலிப் பாத்திரத்துடன்
அலைகின்ற பிச்சைக்காரனும்,
ஒன்றுக்கும் உதவாமல்
செடி சாய்க்கும் புயற்காற்றும்,
சுடுவானில் வியர்வை சொட்ட
வருகின்ற சூரியனும்-
என்னை உனக்கு
நினைக்கச் செய்வதே இல்லையா?

0 comments: